காப்பீடு ஒப்படைப்பு செய்தவருக்கு ரூ 1.20 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
காப்பீடு ஒப்படைப்பு செய்தவருக்கு ரூ 1.20 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
திருச்செங்கோடு, அருகே உள்ள கூட்டப்பள்ளி காலனியில் வசித்து வருபவர்கள் பிரசாந்த் (35), அவரது மனைவி சுஜிதா (32). இவர்கள் இருவரும் கடந்த 2013 டிசம்பர் மாதத்தில், ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஒவ்வொருவருக்கும் ரூ. 10 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளனர். ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தம் 4 லட்சத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு பிரீமியமாக செலுத்தியுள்ளனர். திடீரென பிரசாந்தின் தந்தை இறந்து விட்டதால் தொடர்ந்து பாலிசிக்கான பணத்தை அவர்களால் செலுத்த இயலவில்லை.
பாலிசிக்கு தொடர்ந்து பணம் கட்ட முடியாது என்பதால் பாலிசியை சரண்டர் செய்து தாங்கள் செலுத்திய பணத்தை தருமாறு இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு பிரசாந்த் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடந்த 2016 ஆம் ஆண்டு மனு கொடுத்துள்ளனர். அதனைப் பெற்ற இன்சூரன்ஸ் நிறுவனம் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணம் செலுத்தியிருந்தால் மட்டுமே அதில் குறிப்பிட்ட தொகையை வழங்க முடியும் என்று கூறி முழுப் பணத்தையும் திரும்பத் தர மறுத்து விட்டது. இதனைத் தொடர்ந்து பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் திருப்பி வழங்க வேண்டும் என்று, 2019 ஆம் ஆண்டு சுஜிதா நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி டாக்டர் ராமராஜ் மற்றும் உறுப்பினர் ரமோலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். அதில், இன்சூரன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர் செலுத்திய மொத்த பணத்தையும் தர மறுப்பது சரியல்ல. இதனால் பிரசாந்த் மற்றும் அவரது மனைவிக்கு அவர்கள் செலுத்திய 4 லட்சம் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் 30 சதவீத பணமான ரூ. 1,20,000 ஐ, 4 வார காலத்திற்குள் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.