வருவாய் துறையினருக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
நுகர்வோர் நீதிமன்றம்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பாடாலூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் ராமர் வயது 55, விவசாயி. பாடாலூரில் உள்ள ராமருக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை தங்கவேல் என்பவருக்கு தவறாக பட்டா மாற்றம் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் ராமருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால், அந்த இடத்தை மீண்டும் தனது பெயருக்கு மாற்றி, தனிப்பட்டா வழங்கக்கோரி ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதற்கு உரிய கட்டணத்தையும் செலுத்தி, கோர்ட்டு தீர்ப்பின் நகலையும் இணைத்திருந்தார்.
ஆனால் அந்த இடத்தை ராமர் பெயருக்கு மாற்றம் செய்து தராமல் வருவாய்துறையினர் அவரை அலையவிட்டனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராமர், வக்கீல் அய்யம் பெருமாள் மூலம் பெரம்பலூர் மாவட்டநுகர்வோர் நீதிமன்றத்தில் ஆலத்தூர் மண்டல துணை தாசில்தார், அப்போது இருந்த முத்துகுமார் உள்பட கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கலெக்டர் மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர், ராமர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தராத வருவாய் துறையினரின் சேவை குறைபாட்டிற் காக மற்றும் மன உளைச்சலுக்கு காரணமாகவும் இருந்துள்ள எதிர்மனுதாரர்கள் 2 பேரும் விவசாயி ராமருக்கு நிவாரணத் தொகையாக ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரமும் தீர்ப்பு வெளியான 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் இருந்து கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கலெக்டர் ஆகிய 3 பேரை விடுவித்தும் தீர்ப்பளித்தனர்.