இழப்பீடு வழங்க கட்டட ஒப்பந்ததாரருக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு
நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
கட்டுமானப் பணியில் சேவைக்குறைபாடு காரணமாக வீட்டின் உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க கட்டட ஒப்பந்ததாரருக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.
திருநெல்வேலி சமாதானபுரத்தைச் சோ்ந்தவா் ஆவுடையப்பன். இவா் தனது வீட்டின் மாடிப்பகுதியில் முதல் தளம் கட்டுவதற்காக, கட்டட ஒப்பந்ததாரிடம் ஒப்பந்தம் செய்து அதன்படி பணம் அளித்தாா். இருப்பினும் குறிப்பிட்ட காலத்தில் கட்டுமானப் பணியை முடித்துக் கொடுக்கவில்லை. பணியை முடிக்கத் தாமதம் செய்து வந்ததையடுத்து, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் ஆவுடையப்பன் புகாா் மனு அளித்தாா். அதன்பேரில், இரண்டு தரப்பிற்கும் பொதுவான பொறியாளா் மூலமாக கட்டுமானப் பணியை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில், ஒப்பந்ததாரா் கட்டுமான பணிச் செலவு மதிப்பைவிட கூடுதலாக பணம் பெற்றுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து கூடுதலாகப் பெற்ற பணத்தை திரும்ப அளிக்குமாறு ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் ஒப்புக்கொண்டபடி ஒப்பந்ததாரா் பணத்தை திரும்ப தரவில்லை. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஆவுடையப்பன், திருநெல்வேலி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா். பின்னா் இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் திருநீல பிரசாத், உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா், ஒப்பந்தகாரரின் சேவை குறைபாட்டினைச் சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு நஷ்ட ஈடாக ரூ.5 லட்சம், வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.5.10 லட்சத்தை இரு மாதங்களுக்குள் வழங்க உத்தரவிட்டனா்.
Next Story