சேவைக் குறைபாடு; ரூ 52 லட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
பைல் படம்
தூத்துக்குடி டவுன் போல்பேட்டை கிழக்கு பகுதியைச் சார்ந்த சுரேஷ் என்பவர் திருச்செந்தூரிலுள்ள ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அந்த வங்கியானது இவரை ஒரு காப்பீட்டு பாலிசி எடுக்க கூறியது. அதன் அடிப்படையில் மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டு அதற்கான மருத்துவ சான்றிதழையும் சமர்ப்பித்துள்ளார். அதன் பிறகு கூடுதல் பிரீமியம் தொகை கட்ட வேண்டும் என தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் வலியுறுத்தியதால் கூடுதல் பிரீமியம் தொகையை கட்டி வந்தார். பின்பு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார்.
இதைத் தொடர்ந்து மனுதாரரான ஜெயந்தி தனது கணவர் இறந்த பிறகு அவர் பெயரிலுள்ள காப்பீட்டு தொகையை கேட்டு விண்ணப்பித்துள்ளார். தனக்கு இருந்த நோயை மறைத்து காப்பீடு எடுத்துள்ளதால் அந்த தொகையை வழங்க முடியாதென இன்சூரன்ஸ் நிறுவனம் நிராகரித்துள்ளனர். ஆனால் இறந்தவர் ஏற்கனவே மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டு அதற்கான மருத்துவ சான்றிதழையும் சமர்ப்பித்துள்ளார்.
மனுதாரர் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு பல முறை நேரிலும், கடிதங்கள் மூலமாகவும் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயந்தி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் காப்பீட்டு தொகை ரூ.50 இலட்சம், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு ரூ.2 இலட்சம் ஆகியவற்றை வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும், வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.52,10,000 ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.