உதகையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வலியுறுத்தி சிஐடியு, நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் உதகை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
குறிப்பாக உதகை நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் 5-ந் தேதி முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதனால் ஒப்பந்த ஊழியர்கள் வீட்டு வாடகை மற்றும் குழந்தைகள் கல்வி கட்டணங்களை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த இயலாமல் அவதிப்படுகின்றனர்.
இதேபோல் ஒப்பந்த ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பிஎப்., இஎஸ்ஐ., தொகையை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு செலுத்தவில்லை. முறையான பராமரிப்பு இல்லாததால் நகராட்சி குப்பை வண்டிகள் பழுதடைந்து அவ்வப்போது நடுவழியில் நின்று விடுகிறது.
மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை ஒப்பந்ததாரர்கள் இதுவரை வழங்கவில்லை. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்பந்ததாரர் மற்றும் நகராட்சி மேலாளரிடம் கூறினால் யாரும் கண்டுகொள்வதில்லை என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டம் நடைப்பெற்றது.