தர்மபுரி டாஸ்மாக் கிடங்கு முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

தர்மபுரி டாஸ்மார்க் கிடங்கும் முன்பு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமையில் ஒப்பந்த தொழிலாளர்கள் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

தர்மபுரி மாவட்ட டாஸ்மாக் கிடங்கு தர்மபுரியை அடுத்த தடங்கம் அருகே உள்ள தோக்கம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு இந்த கிடங்கில் இருந்து தான் மது பாட்டில்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் மதுபான தொழிற்சாலைகளில் இருந்து மது பாட்டில்கள் லாரிகள் மூலம் இந்த குடோனுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மது பாட்டில் அட்டை பெட்டிகளை லாரியில் இருந்து குடோனுக்கு ஏற்றி இறக்க ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு லாரியிலிருந்து ஒரு பெட்டி இறக்கி குடோனில் வைப்பதற்கு அரசு சார்பில் ரூ. 6.50 வழங்கப்படுகிறது.

அதே பெட்டியை டாஸ்மாக் கடைகளுக்கு எடுத்து செல்வதற்காக குடோனில் இருந்து லாரிக்கு ஏற்றுவதற்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் ரூ.2.10 வழங்குகிறது. இந்த அட்டைப் பெட்டிகளை ஏற்றி இறக்குவதற்கு ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடத்த சில நாட்களாக கூலித்தொகை முறையாக வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக டாஸ்மாக் சுமை தூக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் அண்ணா தொழிற்சங்க தலைவர் கிருஷ்ணன் டாஸ்மாக் நிர்வாகத்திடம் முறையிட்டு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலித்தொகையை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை அடுத்து நேற்று முன்தினம் ஒப்பந்த தொழிலாளர்களின் வங்கி கணக்குக்கு நிலுவை கூலித்தொகை செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் அண்ணா தொழிற்சங்க தலைவர் கிருஷ்ணன் வயது மூப்பு காரணமாக சுமை தூக்கும் பணிக்கு வரக்கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. இதனால் டாஸ்மாக் சுமை தூக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் அண்ணா தொழிற்சங்க தலைவர் கிருஷ்ணனுக்கு ஆதரவாக நேற்று டாஸ்மாக் குடோன் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமையில் ஒப்பந்த தொழிலாளர்கள் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பணி நீக்கம் செய்யப்பட்ட கிருஷ்ணனுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக கூலி வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் பேச்சு நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த முற்றுகைப் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story