சேலம் மத்திய சிறையில் திருநங்கைகள் அறையில் தகராறு
சேலம் மத்திய சிறையில் கொலை வழக்கில் கைதானவர் காவலரைத் தாக்கி திருநங்கைகள் இருந்த அறைக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டார்.
சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் சுமார் 900 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் விசாரணை கைதியாக பள்ளப்பட்டி போலீசாரால் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட 2 திருநங்கைகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறையில் 2-வது பிளாக்கில் தனி அறையில் தங்கியுள்ளனர். அதே 2-வது பிளாக்கில் மற்றொரு தனி அறையில் மனைவியை கொலை செய்து உடலை எரித்த வழக்கில் ஏத்தாப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை திருப்புலி உரிபுரம் பகுதியை சேர்ந்த வல்லரசு (வயது 26) என்பவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, கடந்த 6-ந் தேதி சிறையில் இருந்த கைதி வல்லரசு திடீரென திருநங்கைகள் அடைக்கப்பட்டுள்ள அறைக்குள் புகுந்து தகராறு செய்தார். அப்போது, அறையில் இருந்த திருநங்கைகள் சத்தம் போட்டு கூச்சலிட்டவாறு வெளியே ஓடி வந்தனர். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறை காவலர் செந்தில்குமார், கைதியை தடுத்து வெளியே இழுத்து வந்தார். அப்போது, செந்தில்குமாரின் கழுத்தை பிடித்து நெரித்து கைதி வல்லரசு கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. இதைபார்த்த சிறைக்காவலர்கள் வேகமாக வந்து கைதி வல்லரசுவை பிடித்து தனி அறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறை காவலர் செந்தில்குமார் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ரவி விசாரணை நடத்தி 2 பிரிவுகளின் கீழ் கைதி வல்லரசு மீது வழக்குப்பதிவு செய்தார்.
மேலும், கைதி சிறையில் இருக்கும்போதே அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே, சிறை காவலரை தாக்கிய சம்பவம் தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வினோத்தும் தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.