சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.836.50 ஆக குறைந்தது
சேலத்தில் சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.836.50 ஆக குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் வினியோகத்தை பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட 3 பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் கூட்டமைப்பு, மாதந்தோறும் காஸ் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு கியாஸ் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக கியாஸ் சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் ரூ.1,130-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு சற்று விலை குறைத்து ரூ.900 வரை விற்கப்பட்டது. இதனிடையே நேற்று முன்தினம் மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பை உடனடியாக அமலுக்கு கொண்டு வர எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்தது.
இதன்படி நேற்று அதிகாலை முதல் காஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு அமலுக்கு வந்தது. சேலத்தில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் ரூ.936.50-ல் இருந்து ரூ.836.50-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் காஸ் சிலிண்டர்கள் ‘புக்கிங்’ செய்து நேற்று டெலிவரி வாங்கிய இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.