திருமருகல் ஒன்றியத்தில் மழையால் பருத்தி பயிர்கள் பாதிப்பு
பருத்தி பயிர்களை ஆய்வு செய்த அதிகாரிகள்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிர்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு திருமருகல் ஒன்றியத்தில் கொங்கராயநல்லூர்,ஆலத்தூர்,மருங்கூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிர்களை வேளாண்மை இணை இயக்குநர் தனிஷ்கொடி,துணை இயக்குநர் ஈஸ்வர் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது வேளாண்மை இணை இயக்குனர் தனுஷ்கோடி கூறியதாவது:- பருத்தி 150 நாள் பயிராகும் திருமருகல் ஒன்றியத்தில் சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடியை செய்துள்ளா்.
இப்பயிருக்கு உரிய நேரத்தில் தண்ணீா் அவசியமாகும்.தக்க தருணத்தில் மழை பெய்ததால் சூடு தணிந்து செடியில் காய் காய்க்கும் நிலை உருவாகியுள்ளது.மழை நீரை சிறிது நேரத்தில் நிலம் உறிஞ்சிவிட்டது.காற்றும், மழையும் சோ்ந்து தாக்கினால் செடியில் உள்ள பூக்கள் உதிா்ந்துவிடும்.அவ்வாறான நிலை இதுவரை ஏற்படவில்லை.
அதே வேளையில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. மழை பெருமளவு பெய்து, செடிக்கு கீழ் தண்ணீா் தேங்கினால், வோ் அழுகல் நோய் ஏற்படும்.மழைநீர் தேங்கிய வயல்களில் உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி மழை நீரை வடிய வைக்க வேண்டும். பருத்தி செடி வாடல் நோயை கட்டுப்படுத்த ஆக்ஸிகுலோரைடு 2.5 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்கள் நனையுமாறு ஊற்ற வேண்டும்.மேலும் பூக்கள் உதிராமல் இருக்க பிளானோபிக்ஸ் 175 மில்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் பருத்தி செடிகளில் தெளிக்க வேண்டும்.
மேலும் செடிகள் வளர்ச்சியை மீட்டெடுக்க 19 : 19 : 19 என்ற கலப்பு உரத்தை ஒரு சதவீதம் இலை வழியாக தெளிக்க வேண்டும், மேலும் காய் அழுகலை கட்டுப்படுத்திட கார்பெண்ட்சிம் 500 கிராம் மருந்தை ஒரு ஹெக்டேர் பருத்தி பயிரில் தெளித்து கட்டுப்படுத்தலாம் என அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.