நாட்டு வெடிகுண்டு தயாரித்தவர் கைது

விவசாய நிலத்தில் 37 நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள பி.எல்.தண்டா, பொரசப்பட்டு, மேல் வணக்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தரைக்காடுகள் அதிக அளவில் அமைந்துள்ளது. இந்த தரை காடுகளில் இருந்து மான், முயல், காட்டு பன்றிகள் விவசாய நிலத்திற்கு இறை தேடி வரும். இந்த காட்டு விலங்குகளை அப்பகுதியில் உள்ள சமூக விரோதிகள் சிலர் வேட்டையாடி விற்பனை செய்து வருவதும் அவ்வப்போது வனத்துறையினர் அவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகிறகின்றனர். இந்நிலையில் செங்கம் அருகே உள்ள பி.எல். தண்டா (கொல்லக்கொட்டாய்) பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படுவதாக ரகசிய தகவல் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை செங்கம் போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் பி.எல். தண்டா (கொல்ல கொட்டாயில்) விவசாய நிலத்தில் 37 நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் இதுகுறித்து முனுசாமி(57) என்ற நபரிடம் போலீசார் விசாரணை செய்ததில் 37 நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து முனுசாமியை கைது செய்து செங்கம் காவல் நிலையத்திற்கு போலிசார் அழைத்து வந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
