வெளிநாட்டு பயணியின் கைப்பையை திருடிய தம்பதி கைது

வெளிநாட்டு பயணியின் கைப்பையை திருடிய தம்பதி கைது

காவல் நிலையம் 

சமயபுரத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட வந்த வெளிநாட்டு பயணிகள் தவறவிட்ட கைப்பையை திருடி நகை,பணத்தை எடுத்துக் கொண்டு பாஸ்போர்ட்டை எரித்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

மலேசிய நாட்டில் வசிப்பவர் 52 வயதான சந்திரன்.இவரது மனைவி வனிதா,மகள் பிரித்திகா மற்றும் உறவினர்கள் 3 பேர் என 6 பேர் திருச்சிக்கு வந்தனர். இதில் சந்திரனின் மகள் பிரித்திகாவின் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி சென்று விட்டு நேற்று திருச்சிக்கு வந்தனர். அப்போது சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்துவிட்டு பின் சமயபுரம் அருகே உள்ள அக்கரைபட்டி சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்த பின்னர் சமயபுரம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் உணவு அருந்த சென்றுள்ளனர்.

உணவு அருந்திய பின் சந்திரன் தான் கொண்டு வந்த கைப்பையை மறந்து உணவகத்தில் விட்டுவிட்டு காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். அங்கு சென்று பார்த்த சந்திரன் கையில் இருந்த கைப்பை இல்லாத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உணவகத்தில் கைப்பையை மறந்து விட்டிருக்கலாம் என நினைத்து காரைக்குடியிலிருந்து மீண்டும் சமயபுரத்தில் உள்ள அந்த உணவத்திற்கு வந்து விசாரித்தனர்.

அப்போது இந்த உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது அந்த உணவகத்தில் பணியாளராக வேலை செய்த பெண் கைப்பையை எடுத்துச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது. இதனை அடுத்து சந்திரன் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சமயபுரம் போலீசார் நேரில் சென்று கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை செய்தனர்.விசாரணையில் உணவகத்தில் வேலை செய்த சமயபுரம் சோலை நகரை சேர்ந்த அலெக்ஸ் மனைவி அலமேலு எனவும் .அலமேலு கைப்பையை எடுத்து தன் கணவர் அலெக்ஸ்விடம் கொடுத்தும் தெரியவந்தது. மேலும் அதில் உள்ள பணம் மற்றும் நகை எடுத்துக் கொண்டு 3 பாஸ்போர்ட்டுகளை எரித்து விட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் அலமேலு, அலெக்ஸிடம் இருந்த பணம் மற்றும் நகையை மீட்டனர். பின்னர் கணவன், மனைவி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த சமயபுரம் போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story