சாலை விபத்தில் கணவன் மனைவி உயிரிழப்பு
சென்னை அடுத்த ஆவடி பெரியார் நகர், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் மகன் மெய்யழகன்,50. இவர் அதே பகுதியில் தனியார் சைக்கிள் கம்பெனியில் ஒப்பந்தம் எடுத்து வேலை செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமி, 48. இவர்கள் இருவரும் நேற்று காலை தனது இரு சக்கர வாகனத்தில், ஆவடியில் இருந்து தனது உறவினர் சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதாக திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை பகுதி நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி புதிய புறவழிச்சாலை அருகே இரு சக்கர வாகனம் வந்த போது, எதிரே வந்த கார் அதிவேகமாக வந்து, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், மெய்யழகன், லட்சுமி ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
அவ்வழியாக சென்றவர்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கணவன், மனைவி ஆகிய இருவரும் இறந்தனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.