மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

மலேசியாவிலிருந்து திரும்பி வந்து காதலியை கரம் பிடித்த வாலிபர் பாதுகாப்பு கேட்டு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார்.

திருவண்ணாமலையில் காதலிக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதை அறிந்த காதலன் மலேசியாவிலிருந்து திரும்பி வந்து காதலியை திருமணம் செய்து கொண்டார். பிறகு அவர்கள் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். திருவண்ணாமலை தேனிமலை சேத்துகிணறு தெருவைச் சேர்ந்தவர் அசித்ரா (வயது 20) தந்தை பெயர் சிவக்குமார்.

நேற்று அசித்ரா தனது காதலுடன் திருமண கோலத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். பிறகு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நானும், எனது தெருவில் வசித்து வரும் வினோத்குமாரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வருகிறோம். அவர் மலேசியாவில் வேலையில் இருக்கிறார். நான் திருவண்ணாமலை திருக்கோயிலூர் சாலையிலுள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறேன்.

திடீரென எனது பெற்றோர்கள் எனக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இது பற்றி நான் காதலித்து வந்த வினோத்குமாரிடம் தெரிவித்தேன். அவர் மலேசியாவிலிருந்து வந்தார். நானும், அவரும் கடந்த 30ந் தேதி வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டோம். இதைக் கேள்விப்பட்டு எனது தந்தையும், உறவினர்களும் வினோத்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது தாயாரை அடித்து உதைத்து குடும்பத்தோடு ஒழித்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.

நாங்கள் மேஜர் என்பதால் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டோம். எனவே எங்களுக்கும், எனது மாமியாருக்கும் உயிர் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதையடுத்து இந்த மனு மீது உரிய விசாரணை நடத்திட திருவண்ணாமலை நகர காவல்துறைக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் உத்தரவிட்டார். அவர்கள் இருதரப்பையும் அழைத்து விசாரித்தனர். அப்போது தனது கணவருடன்தான் செல்வேன் என அசித்ரா உறுதியாக சொல்லி விட்டதால் காவல்துறையினர் வினோத்குமாருடன் அனுப்பி வைத்தனர்

Tags

Read MoreRead Less
Next Story