டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆட்சியரிடம் சிபிஎம் மனு

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆட்சியரிடம் சிபிஎம் மனு

ஆட்சியரிடம் மனு அளித்த சிபிஎம் நிர்வாகிகள் 

ஒரத்தநாடு வட்டாச்சியர் தலைமையில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் தீபக் ஜேக்கபிடம் சிபிஎம் சார்பில் மனு அளிக்கப்பட்டது..

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற, "உங்கள் ஊரில், உங்களைத் தேடி" திட்டம் ஆய்வுப்பணிக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப்பிடம், ஒரத்தநாடு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ் குமார், ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ் ஆகியோர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், மன்னார்குடி முக்கம் பிரிவு சாலையில், பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் இடையூறாக, மிக மோசமான நிலையில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை அடைத்து பூட்டுப் போடும் போராட்டம், எங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் நடைபெற்றது.

இது தொடர்பாக கடந்த 27.03.2023 அன்று காலை 11 மணியளவில் ஒரத்தநாடு வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஒரு மாத காலத்தில் மதுக்கடையை அகற்றுவதாக அப்போது உறுதி அளிக்கப்பட்டது. தற்போது ஒரு வருடம் முடிந்தும் இதுவரை டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. எனவே, உடனடியாக ஏற்கனவே கொடுக்கப்பட்ட உறுதிமொழியை அமல்படுத்தும் வகையில் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags

Next Story