தஞ்சை மருத்துவக் கல்லூரியில் இதய உயிர்ப்பு பயிற்சி

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மனித பொம்மைகளை வைத்து அடிப்படை இதய உயிர்ப்பு பயிற்சி நடைபெற்றது.

உலக அவசர சிகிச்சை தினத்தை முன்னிட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மனித பொம்மைகளை வைத்து பி.எல்.எஸ். என்ற அடிப்படை இதய உயிர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் மே 27 ஆம் தேதி உலக அவசர சிகிச்சை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நடந்த இதய உயிர்ப்பு பயிற்சி முகாமை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.பாலாஜி நாதன் துவக்கி வைத்து பேசுகையில், தமிழக முதலமைச்சரால் துவங்கப்பட்ட நம்மை காக்கும் 48 இன்னுயிர் காப்போம் திட்டம் தஞ்சை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதற்காக அவசர சிகிச்சை துறையை பாராட்டுகிறேன்" என்றார். தொடர்ந்து மனித பொம்மைகளை வைத்து பி.எல்.எஸ். என்ற அடிப்படை இதய உயிர்ப்பு பயிற்சி குறித்து பத்திரிகையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், அவசர சிகிச்சையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் 108 அவசர சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு அவசரகால சிகிச்சை எவ்வாறு செய்ய வேண்டும் என்று செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அவசர சிகிச்சை பிரிவு துறை பொறுப்பு தலைவர் மருத்துவர் வினோத், உள்ளுறை மருத்துவ அதிகாரி மருத்துவர் ஏ.செல்வம், துணை உள்ளுறை மருத்துவ அதிகாரிகள் மருத்துவர் முகமது இத்ரீஸ், மருத்துவர் முத்து மகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் பாலாஜிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நம்மை காக்கும் 48 இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், சாலை விபத்துகளில் காயம்பட்டு வரும் நோயாளர்களுக்கு 48 மணி நேரத்திற்குள் அவசர மற்றும் தீவிர சிகிச்சைகள், காப்பீட்டின் மூலம் ஒரு லட்சம் ரூபாய் வரை இலவசமாக செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தங்களின் அரசு அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பித்தால் போதுமானது. இத் திட்டத்தின் கீழ்வரும் சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள், ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் எந்த விதமான கட்டணமும் இல்லாமல் காப்பீட்டின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் இதுவரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் கடந்த 2021 ஆம் ஆண்டில் 23 பேரும், 22 ஆம் ஆண்டில் 4,154 பேரும், 2023 ஆம் ஆண்டில் 1,384 பேரும், நடப்பாண்டு மே மாதம் வரை 608 பேரும் என மொத்தம் 6,169 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 5,690 பயனாளர்களுக்கு 5 கோடியே 10 லட்சத்து 48 ஆயிரத்து 120 ரூபாய் காப்பீட்டு பயன்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய இமாலய தொகையை அரசு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பெற்றுத் தந்த, அவசர சிகிச்சை துறை பொறுப்பு தலைவர் மருத்துவர் ஏ.வினோத் மற்றும் அவருடன் பணியாற்றும் அனைத்து மருத்துவர்கள், மேற்படிப்பு மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் காப்பீட்டு திட்ட ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திட்டத்தில் தஞ்சை மருத்துவக் கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல், அவசர சிகிச்சை துறையில் கடந்த 2023 ஆம் ஆண்டில் 6,931 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டதில் 6,407 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். விபத்து, தற்கொலை முயற்சி என பல்வேறு வகையிலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இவர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நடப்பாண்டு மே மாதம் வரை 2,921 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதில் 2,778 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும் 2022 ஆம் ஆண்டு முதல் நடப்பு நாள் வரை 30 ஆயிரத்து 814 அவசர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அவசர சிகிச்சைகள் 6 மணி நேரங்களில் மருத்துவர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது" இவர் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story