கார் மீது க்ரேன் விழுந்து விபத்து!

மஞ்சூர் அருகே கார் மீது க்ரேன் வாகனம் விழுந்து விபத்து உண்டானது; சுற்றுலாப் பயணிகள் காயமின்றி தப்பினர்.

நீலகிரியில் கோடை சீஸன் தொடங்கி விட்டதால் சுற்றுலா பயணிகள் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு கார்களில் படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மஞ்சூர் வழியாக கிண்ணக்கொரைக்கு சென்றனர்.

இந்நிலையில் வனத்துறைக்கு சொந்தமான மரம் அறுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள க்ரேன், கோரகுந்தா எஸ்டேட்டில் இருந்து மஞ்சூருக்கு வந்து கொண்டிருந்த நிலையில் தாய்சோலை அருகே கட்டுப்பாட்டை இழந்து கேரள சுற்றுலா பயணிகள் வந்த கார் மீது கவிழ்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் வந்த 5 சுற்றுலாப் பயணிகள் எந்தவித காயமின்றி உயிர் தப்பினர்.

க்ரேன் வாகனம் ஓட்டி வந்த டிரைவர் பிரகாஷுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் பிரகாஷை மீட்டு சிகிச்சைக்காக மஞ்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலையில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Tags

Next Story