குடியிருப்பு பகுதியில் தகன மேடை - குடியிருப்போர் நலச்சங்கம் எதிர்ப்பு
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக பின்புறம் சேதுபதிநகர் வடக்கு பகுதியில் தகன எரி மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய வீடு, மனை உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் நேற்று ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரனிடம் மனு அளித்தனர். இதுகுறித்து குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாளர் மணிமாறன் கூறியதாவது, சேதுபதிநகர் வடக்குப் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் விற்பனை செய்யப்பட்ட வீட்டுமனைகளில் தற்போது 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 400-க்கும் மேற்பட்ட வீட்டுமனைகள் உள்ளன. இக்குடியிருப்பு பகுதியில் அதிகளவில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறையினர், உயர் அதிகாரிகள், நீதிபதிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில், ஊராட்சி சார்பில் தகன எரி மேடை கட்டுகின்றனர். அதன் அருகில் வீட்டுவசதி வாரியத்தால் ஒதுக்கப்பட்ட பள்ளிக்கான இடமும், அருகில் குடியிருப்புகளும் உள்ளன. மேலும் தண்ணீர் கிணறுகளும் உள்ளன. குடியிருப்பு பகுதியில் தகன எரி மேடை கட்டினால், இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பிணங்கள் எரிக்கும்போது துர்நாற்றமும், நோய் தொற்றும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆட்சியர் தகன எரி மேடை அமைப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் இப்பகுதி மக்கள் போராட்டங்கள் நடத்தவும் தயாராக உள்ளோம். மனுவை பெற்ற ஆட்சியர் இருக்கும் இடத்தில் தானே தகன எரி மேடை கட்ட முடியும், வேறு இடம் நீங்கள் தந்தால் அங்கு கட்டுவோம் எனக்கூறுகிறார். இது மனு அளிக்கச் சென்ற எங்களுக்கு மன வேதனையாக உள்ளது என்றார்.