ஆலங்குளம் பகுதியில் காட்டுப் பன்றிகளால் பயிா்கள் சேதம்
பயிா்கள் சேதம்
விளை நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து சேதம் விளைவித்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் விளை நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து சேதம் விளைவித்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். ஆலங்குளத்தில் உள்ள ஒக்கநின்றான் மலையை சுற்றியுள்ள வனப்பகுதியில் மான், மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள், மயில்கள் ஏராளம் காணப்படுகின்றன. இம்மலையை சுற்றி அமைந்துள்ள அத்தியூத்து, கல்லூத்து, முத்துகிருஷ்ணபேரி, குருவன்கோட்டை, மாயமான்குறிச்சி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயமே பிரதான தொழில் தற்போது, அப்பகுதி விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் நெல் பயிரிட்டுள்ளனா். சில இடங்களில் கதிா்கள் தோன்றுமளவிற்கு பயிா்கள் வளா்ச்சி கண்டுள்ளன. இந்நிலையில் விளை நிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள், வனப்பகுதியை சுற்றி வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். எனவே அரசு வன விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தாத வகையில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
Next Story