தரிசு நிலத்தில் சாகுபடி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தஞ்சை அருகே 24 ஏக்கர் தரிசு நிலத்தை மாற்றி முந்திரி, உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் அருகே 24 ஏக்கர் தரிசு நிலங்களை, சாகுபடி நிலங்களாக மாற்றி முந்திரி, உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளதை ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் மேற்கு கிராமம், திருக்கானூர்பட்டி ஆகிய இடங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.

அப்போது, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் குருங்குளம் மேற்கு கிராமத்தில் 12 விவசாயிகளின் 24 ஏக்கர் தரிசு நிலத்தில் ரூ.15 லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, சொட்டுநீர் பாசன முறையில் முந்திரி மற்றும் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளதை ஆட்சியர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, திருக்கானூர்பட்டியில் பிரதமரின் நுண்ணுயிர் பாசன திட்டத்தின் மூலமாக 2.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.1.38 லட்சம் மானியத்தில் ரூ.1.84 லட்சம் கடனுதவி பெற்று, சொட்டுநீர் பாசன திட்டத்தில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளதை ஆட்சியர் பார்வையிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22-ம் ஆண்டு முதல் 14 வட்டாரங்களிலும் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 2021-22-ம் ஆண்டில் தஞ்சாவூர் வட்டாரத்தில் 5. பூதலூர் வட்டாரத்தில் 7, திருவோணம் வட்டாரத்தில் 2 என மொத்தம் 14 தரிசு நில தொகுப்புகள் 299 ஏக்கரில் கண்டறியப்பட்டன. அங்கு 17 ஆழ்குழாய் கிணறுகள் அமைக் கப்பட்டு, இலவச மின் வசதி ஏற்படுத்தப்பட்டு, சொட்டுநீர் பாசன முறையில் விவசாயிகளின் விருப்பத்துக்கேற்ப மரப் பயிர்கள். பழப் பயிர்கள், பணப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இதில், 229 விவசாயிகள் பயனடைந் தனர். இதேபோல் , 2022-23-ஆம் ஆண்டில் 226 விவசாயிகளுக்காக 19 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. 2023-24-ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் ஒரத்தநாடு வட்டாரத்தில் 67.09 ஏக்கரில் 5 தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டு, முட்புதர்கள் அகற்றப்பட்டு சமன் படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்து ராஜா, துணை இயக்குநர்கள் ஈஸ்வர், சுஜாதா, கோமதிதங்கம், உதவி இயக்குநர் அய்யம் பெருமாள், வேளாண்மை அலுவலர் தினேஷ்வரன், தோட்டக்கலை அலுவலர் சோபியா, உதவி அலுவலர்கள் ஞானசுந்தர், வெங்கடாஜலபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story