மண்ணின் வளத்தை மேம்படுத்த பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி
பசுந்தாள் உரப்பயிர்
பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) எஸ்.ராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, "நெற்பயிர் போன்று ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்யும்போது மண்ணில் உள்ள பேரூட்டச்சத்துக்கள் அதிக அளவில் மண்ணிலிருந்து பயிரால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் மண்ணில் அதிக அளவில் சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படுவதோடு மண்ணின் வளமும் குன்றி விடுகிறது. மண்ணின் வளத்தை மேம்படுத்தினால் மட்டுமே மண்ணின் கட்டமைப்பு, பௌதீகத் தன்மை, மண்ணின் நீர்பிடிப்புத் தன்மை மற்றும் நுண்ணியிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய முடியும்.
தமிழ்நாடு முதல் அமைச்சரின், "மண்ணுயிர் காத்து மன்னுயிர்க் காப்போம்" எனும் திட்டத்தின் கீழ் மண்ணின் வளத்தை மேம்படுத்த 50 விழுக்காடு மானிய விலையில், பசுந்தாள் உர விதைகள் மற்றும் 50 விழுக்காடு மானிய விலையில் திரவ உயிர் உரங்கள் ஆகியவற்றை வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே, பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் மற்றும் திரவ உயிர் உரங்கள் பயன்டுத்தும், விவசாயிகள் உடனடியாக தங்கள் பெயர்களை தொடர்புடைய வேளாண்மை உதவி அலுவலர்களிடம் முன்பதிவு செய்து கொள்ளலாம்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.