குமரியில் முன்கூட்டியே துவங்கிய கன்னிப்பூ நெல் சாகுபடி
கோடை மழை கைகொடுத்ததால் குமரியில் கன்னிப்பூ நெல் சாகுபடி முன்கூட்டியே துவங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பேச்சி்ப் பாறை அணையின் வெள்ள அபாய கட்டத்தை தாண்டி 45 அடிக்கு மேல் தண்ணீர் உயர்ந்து மறுகால் பாய்ந்து வருகிறது. உபரிநீரும் திறந்து விடப்பட்டு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிகக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை மழை கைகொடுத்து வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருப்பதிசாரம், இறச்சகுளம், சுசீந்திரம், பூதப்பாண்டி, வழுக்கம்பாறை, இரணியல், வில்லுக்குறி, பெரியகுளம், பறக்கை உட்பட பல பகுதிகளில் கன்னிப்பூ நெல் சாகுபடி பணி மும்முரமாக நடந்து வருகிறது.
ஏற்கனவே பாவிய நாற்றங்கால்களை பிடுங்கி விவசாயிகள் நடவு செய்து வருகின்றனர். தற்போது 1000 ஹெக்டேருக்கு மேல் முதல்கட்ட நடவுப்பணி வேகமாக நடந்து வருகிறது. குளங்களும் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜூன் மாத துவக்கத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என்பதால் குமரி மாவட்டம் முழுவதும் கன்னிப்பூ நடவு பணிகள் முழுமை பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். குமரி மாவட்டத்தில் கோடை மழையால் கன்னிப்பூ சாகுபடி பணிகள் துவங்கியுள்ள நிலையில் புத்தேரி பகுதியில் நெல் நாற்றங்கால் நடவு பணி மும்முரமாக நடைபெற்றது.