கிணற்றுப் பாசனம் மூலம் கம்பு தானிய சாகுபடி அமோகம்

கிணற்றுப் பாசனம் மூலம் கம்பு தானிய சாகுபடி அமோகம்

பைல் படம் 

கோவில்பட்டி கோட்டத்தில் கிணற்றுப் பாசனம் மூலம் கம்பு தானியம் சாகுபடி அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்தில் கடந்த ராபி புரட்டாசி பட்டத்தில் பயறு வகைகள், பயிர்வகைகள், எண்ணெய் வித்துக்கள், பணப்பயிர்கள் போன்றவைகள் பயிரிட்டனர். டிசம்பர் மாத பெய்த பெருமழைக்கு பயிர்கள் கடுமையாக சேதமடைந்து விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் நட்டம் அடைந்தனர்.

இந்நிலையில் கோடையில் கிணற்றுப்பாசனம் மூலம் பருத்தி, சீனி அவரை, வெள்ளரி, காய்கனிகள் பயிரிட்டு உள்ளனர். குறைந்த நாள் பயிர் கம்பு அதிகளவில் கோவில்பட்டி, கடலையூர், லிங்கம்பட்டி, எட்டையபுரம், புதூர், முத்துலாபுரம் போன்ற பகுதிகளில் பயிரிட்டு உள்ளனர். கம்பு மகசூல் காலம் 100 நாட்களாகும். கடந்த பங்குனி மாதம் பயிரிட்ட கம்பு பயிர் தற்போது கதிர் பிடித்து வருகிறது. கோடையில் விளைவிக்கப்படும் கம்பு தானியம் அதிக சத்துமிக்கதாக இருக்கும்.

மழைகாலத்தில் விளைவித்த கம்பு தானியத்தை விட கோடையில் விளைவிக்கப்படும் கம்பு தானியத்திற்கு நோய் எதிர்ப்பு அதிகம் உள்ளதால் சந்தையில் அதிக விலை கிடைக்கிறது. ஏக்கருக்கு பத்து முதல் 15 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். தற்போது குவிண்டால் ரூ.2600-க்கு விற்பனையாகிறது. இதனால் கிணற்றுப் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தவிர கோடையில் கிணற்றுப் பாசனம் மூலம் சீனி அவரை பயிரிடப்பட்டுள்ளது சீனி அவரை பயிர் பயிர் காப்பீடு பட்டியலில் இல்லை. சீனி அவரை தோட்டம் மற்றும் மானாவாரி நிலங்களிலும் பயிரிடப்படுகிறது. எனவே வரக்கூடிய பருவ ஆண்டில் சீனி அவரையை பயிர்காப்பீடு பட்டியலில் இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் உட்பட்உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story