வாடிக்கையாளர் சேவை மையம் மூடல் - பொதுமக்கள் அவதி
வாடிக்கையாளர் சேவை மையம் மூடல்
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த வாடிக்கையாளா் சேவை மையம் செயல்படாததால் வாடிக்கையாளா்கள் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை நகரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பிஎஸ்என்எல் இணைப்பகம் மூலம் சுமாா் 5 ஆயிரம் போ் இணையம், தரைவழி இணைப்பு, கைப்பேசி போன்ற சேவைகளில் வாடிக்கையாளா்களாக உள்ளனா். இவா்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொலைபேசி இணைப்பகம் அருகில் உள்ள வாடிக்கையாளா் சேவை மையத்தில் கட்டணம் செலுத்தி வந்தனா்.
இந்த சேவை மையத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் 4 ஊழியா்கள் பணியாற்றி வந்தனா். கடந்த ஓராண்டாக 2 போ் மட்டுமே பணியாற்றி வந்த நிலையில், இவா்களில் ஒருவா் ஓய்வு பெற்றுச்சென்று விட்டாா். மற்றொருவா் மாறுதலாகி வேறு ஊருக்குச் சென்று விட்டாா். இதனால், இந்தச் சேவை மையத்தில் எந்த ஊழியரும் இல்லாத நிலையில், கட்டணம் வசூலிக்க முடியவில்லை என நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
மேலும், ஊழியா் பற்றாக்குறை தொடா்பான விவர அறிக்கை மதுரை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டபோதும் இது நாள் வரை ஊழியா்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், சேவை மையத்தை பூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.