மலேசியாவுக்கு கடத்த முயன்ற 160 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்; சென்னை பயணி கைது!!
Chennai airport
சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் தனியார் பயணிகள் விமானம் ஒன்று, நேற்று முன்தினம் அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர் சுற்றுலாப் பயணிகள் விசாவில், அந்த விமானத்தில் மலேசியா செல்வதற்காக வந்திருந்தார். அவர் வைத்திருந்த 2 அட்டை பெட்டிகளில் என்ன இருக்கிறது என்று பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அதில் சமையலுக்கு தேவையான அரிசி, பருப்பு வகைகள் இருப்பதாக கூறினார். ஆனால், அந்த அட்டை பெட்டிகள் லேசாக அசைவது போல் தெரிந்தன. இதனையடுத்து அதிகாரிகள் அட்டை பெட்டியை திறந்து பார்த்தபோது, அதற்குள் நட்சத்திர ஆமைகள் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. பின்னர் அந்த பயணியையும், நட்சத்திர ஆமைகளையும் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதிகாரிகள் அந்த பயணியின் மலேசிய பயணத்தை ரத்து செய்தனர். மேலும் 2 அட்டை பெட்டிகளிலும் இருந்த நட்சத்திர ஆமைகளை கணக்கிட்டனர். அதில் 160 நட்சத்திர ஆமைகள் இருந்தன. இதையடுத்து, சுங்க அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பயணி, இந்த நட்சத்திர ஆமைகளை ஆந்திர மாநிலம் சதுப்பு நிலப் பகுதியில் இருந்து பிடித்து வருவதாகவும், இங்கு ரூ.50ல் இருந்து ரூ.100 வரை விற்கும் இந்த ஆமைகளை மலேசிய நாட்டில் ஒரு ஆமை மட்டும் ரூ.5 ஆயிரம் கொடுத்து வாங்குவார்கள் என்றும் கூறினார். மலேசியாவில் உள்ள பெரிய பங்களாக்களில் அலங்கார தொட்டிகளில் இந்த ஆமைகளை வளர்க்கின்றனர். அதுமட்டுமின்றி பெரிய நட்சத்திர விடுதிகளில், இறைச்சி மற்றும் சூப்புக்காக ஆமைகளை பயன்படுத்துகின்றனர். இதன் ஓடுகளில் வண்ணவண்ணமாக அலங்கார பொருட்கள் தயாரிக்கின்றனர். அதோடு மருத்துவ குணம் உடைய நட்சத்திர ஆமைகளை மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. பிடிபட்ட நட்சத்திர ஆமைகளை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா அல்லது வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.