தனிநபர் மின்பாதைக்காக மரங்கள் வெட்டி அகற்றம் - கிராம மக்கள் எதிர்ப்பு
வெட்டப்பட்ட மரம்
வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இருந்து திண்டுக்கல் நான்கு வழிச்சாலையை இணைக்கும் ஊராட்சி ஒன்றிய சாலை நெடுக மரங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை மரம் வெட்டும் தொழிலாளர்கள் சிலர் மிஷன் ரம்பங்களுடன் வந்து மரங்களை அடியோடும், ரோடு பகுதி நோக்கி இருந்த பெரிய மரக்கிளைகளையும் வெட்டினர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ' மரங்களை வெட்ட ஆர்.டி.ஓ., உத்தரவு பெறப்பட்டுள்ளதா' கேட்டனர். பதிலளித்த தொழிலாளர்கள், 'மரங்களை வெட்ட மில் நிர்வாகத்தினர் அழைத்தனர் அதனால் வந்தோம்' என்றனர். மக்கள் எதிர்ப்பை கண்ட அவர்கள் சென்றுவிட்டனர். கிராம மக்கள் சார்பில் பிரகாஷ் வடமதுரை போலீசிலும் புகார் செய்தார்.வெள்ளபொம்மன்பட்டியை சேர்ந்த ஓய்வு கண்டக்டர் ஆர்.வேலுச்சாமி கூறுகையில்,'' அருகில் இருக்கும் மில் நிர்வாகத்தினர் தங்களது மில்லில் இருந்து தனியே மின்சப்ளை எடுத்து மற்றொரு சிறிய தொழிற்சாலைக்கு கொண்டு செல்லும் நோக்கில் இவ்வாறு செய்துள்ளனர். இதே ரோட்டில் ஏற்கனவே ஒரு பக்கம் இருக்கும் மின்பாதை அதிக பயன்பாடு இல்லாத நிலையில் அந்த வழியே கொண்டு சென்றால் மரங்களை வெட்ட அவசியம் ஏற்படாது. மேலும் பஸ், இதர வாகன போக்குவரத்து இருக்கும் இந்த ரோட்டை எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்யவும் இடையூறாக இந்த புதிய மின் பாதை இருக்கும். இதை தவிர்க்க வேண்டும். ஒரு பக்கம் மரங்களை வளர்க்க அறிவுரையும், மறுபக்கம் அவசிய தேவையின்றி மரங்களை அழிப்பது வேதனை தருகிறது,''என்றார். வேடசந்துார் தாசில்தார் விஜயலட்சுமி கூறுகையில், ''உயர் நீதிமன்றம் தொடர்பான பணிக்காக மதுரையில் உள்ளேன். சம்பவ இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.