வாகனங்களில் சிலிண்டர் - சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்
தமிழகத்தின் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் அடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு படையெடுத்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஒரே சமயத்தில் ஊட்டிக்கு வருவதால், ஊட்டியில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி கட்டணம், உணவு கட்டணங்கள் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதனால் செலவுகளை கட்டுப்படுத்த சுற்றுலா பயணிகள் சிலர் அவர்களது வாகனங்களில் எரிவாயு சிலிண்டர், அடுப்பு, பாத்திரம், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வந்து ரோட்டோரங்களில் சமைத்து, உணவருந்தி செல்கின்றனர்.
இதன்படி 65 சதவீத வனப்பகுதியை கொண்ட நீலகிரியில் சாலையோரம் அல்லது வனப்பகுதி ஓரம் அவர்கள் வாகனங்களை நிறுத்தி சமையல் செய்கின்றனர். பருவமழை பாதிப்பு மற்றும் கோடைமழை இதுவரை பெய்யாததால் வறண்டு போய் உள்ள நீலகிரி வனப் பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படும் சூழ்நிலையில், சுற்றுலா பயணிகள் சமையல் செய்வதால் மேலும் தீ விபத்து அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட தீ பிடிக்கக் கூடிய பொருட்களை எடுத்து வர மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதை மீறி சில சுற்றுலா பயணிகள் அவர்களது வாகனத்தில் எரிவாயு சிலிண்டர்களை எடுத்து வருகின்றனர். நீலகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் உத்தரவின் பேரில் ஊட்டிக்கு அந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். இதன்படி வேலூர் மற்றும் கர்நாடக மாநில மைசூர் பகுதியில் இருந்து பஸ் மற்றும் வேனில் வந்த சுற்றுலா பயணிகள் வாகனங்களில் இருந்த எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் எரிவாயு சிலிண்டர்கள் எடுத்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.