மந்தகதியில் மேம்பாலப் பணி படப்பையில் தினமும் நெரிசல்
பாலம் கட்டும் பணி
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில், மேம்பாலம் அமைக்கும் பணி இரண்டு ஆண்டுகளாக மந்தகதியில் நடக்கும் நிலையில், சாலை குறுகலானதால் தினமும் நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை - திருச்சி ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக, வண்டலுார் - வாலாஜாபாத் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள படப்பை பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, 2022 ஜனவரியில் துவங்கியது. இந்த பணியால் வழக்கத்தை விட இருமடங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பாலப் பணி காரணமாக, படப்பை பஜாரில் இருந்த பேருந்து நிறுத்தம் வரை, அரை கி.மீ., துாரத்திற்கு தற்காலிகமாக போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதனால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பாலப் பணிக்காக சாலையோரம் அமைக்கப்பட்ட தடுப்புகளை மேலும் விரிவுபடுத்தியதால், சாலை குறுகலாகி உள்ளது. இதனால், இந்த வழியே வாகனங்கள் நீண்ட துாரத்திற்கு அணிவகுத்து ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது. நெரிசலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இரண்டு ஆண்டுகளாக மந்தகதியில் நடக்கும் பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.