தினசரி சந்தை... புதிய கட்டிடத்திற்கு இடம் மாறுது !

நாமக்கல் தினசரி சந்தை நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள புதிய கட்டிடத்திற்கு இடம் மாறுகிறது.

நாமக்கல் -திருச்செங்கோடு ரோட்டில், நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள காலி இடத்தில் தினசரி சந்தை மற்றும் வாரச்சந்தை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள், தற்காலிக டெண்ட் அமைத்து கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். சந்தை வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, கலைஞரின் நகர்ப்புற மேம்பாடுத் திட்டத்தின் கீழ் புதிய சந்தை வளாகம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கியது.

இதையடுத்து, வியாபாரிகளுக்கு சந்தை வளாகத்திலேயே நகராட்சி நிர்வாகம் மாற்று இடம் ஒதுக்கீடு செய்து கொடுத்தது.புதிய சந்தை வளாகம் அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. 3 பகுதிகளாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு 282 கடைகள் இடம் பெற்றுள்ளன. தினசரி சந்தை, வாரச்சந்தை, இறைச்சி விற்பனையாளர்கள் என அனைவருக்கும் கடைகள் ஒதுக்கும் வகையில், புதிய சந்தை வளாகம் அமைந்துள்ளது. சந்தைக்குள் சாலை வசதி மேம்பாடு, மின்விளக்கு வசதிகள் நகராட்சி நிர்வாகம் செய்துள்ளது. இதையடுத்து வருகிற பிப்ரவரி -15 வியாழக்கிழமை முதல் நாமக்கல் நகராட்சி அலுவலகம் பின்புறம் புதிதாக அமைக்கப்பட்ட கட்டத்தில் அனைத்து கடைகளும் செயல்படும் என ஒப்பந்ததாரர் சார்பில் தினசரி மார்க்கெட் நுழைவுவாயிலில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.

Tags

Next Story