விராலிமலையில் கோடை மழையால் பயிர்கள் சேதம்

விராலிமலை ஒன்றிய பகுதிகளில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பேயாததால் கண்மாய்கள், குளங்கள் வறண்டன. நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் கிணற்று பாசனமும் மற்றும் ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் கோடை உழவு மேற்கொண்டு நெல் சாகுபடி செய்திருந்தனர்.
சில வாய்க்கால்களில் நெற்கதிர்கள் நன்றாக வளர்ந்தும் சில வயல்களில் நெற்கதிர்களை அறுவடைக்கும் தயார் நிலையில் இருந்தன.
இந்நிலையில் விராலிமலை வட்டாரத்தில் கடந்த இரண்டு வாரமாக காலமாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது மழை காரணமாக வேலூர், கந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் அதிகமான ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்து மழை நீரில் மூழ்கின. இதை பார்த்த விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இதுகுறித்து வேலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாகராஜன் கூறுகையில் இந்த கிராமத்தில் மட்டும் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் பயிரிட்டு இருந்த நிலையில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் நெற்கதிர்கள் சாய்ந்து விட்டன நெல்மணிகள் முளைத்து சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே வேளாண்மை துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பயிரிட வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
