தொடர் மழையால் வெங்காய விளைச்சல் பாதிப்பு - இழப்பீடு வழங்க கோரிக்கை

தொடர் மழையால் வெங்காய விளைச்சல் பாதிப்பு - இழப்பீடு வழங்க கோரிக்கை
நீரில் மூழ்கிய வெங்காய பயிர்கள் 
திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக திருகல், அழுகல் நோயினால் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் சேதம், உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான மறவர் பெருங்குடி, எம்.மீனாட்சிபுரம் கல்லுப்பட்டி, சலுக்குவார்பட்டி, கஞ்சம்பட்டி, சுத்த மடம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 500 ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிர் செய்துள்ளனர்.

சின்ன வெங்காயத்தை 70 நாட்கள் முதல் 110 நாட்களில் விவசாயம் செய்து அறுவடை செய்யலாம். எனவே இப்பகுதியில் உள்ள விவசாயிகள் ஏராளமானோர் சின்ன வெங்காயம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தற்போது ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு செய்துள்ள நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அதிகளவு நீர் தேங்கி வெங்காய பயிர்கள் முழுவதும் திருகல் மற்றும் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சின்ன வெங்காயத்திற்கு எதிர்பார்த்த விலையும் கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் ஏராளமான விவசாயிகள் விதைக்காக சேமித்து வைத்த வெங்காயம் முழுவதும் மழையால் அழுகியும், முளைத்தும் வீணாகி உள்ளது. இதேபோல் கடந்த ஆண்டும் மழையால் வெங்காய விவசாயம் பாதிக்கப்பட்டதாகவும், அதன் பின்பு கோடை காலத்தில் பயிரிடப்பட்டு வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் விவசாயம் பாதித்த நிலையில், தற்போது மீண்டும் தொடர் மழை காரணமாக அழுகல் மற்றும் திருகல் நோயால் வெங்காயப் பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து விவசாயிகளின் நலன் கருதி உரிய இழப்பீட்டு தொகை வழங்க உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாய பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story