ஸ்ரீரங்கம் கோயில் கோபுர சுவா் சிற்பங்கள் சேதம்

ஸ்ரீரங்கம் கோயில் கோபுர சுவா் சிற்பங்கள் சேதம்
ஸ்ரீரங்கம் கோயில் மேற்கு கோபுரத்துக்குள் மாநகராட்சி டிப்பா் லாரி ஒன்று உள்ளே செல்ல முயன்றபோது, சுவரில் இருந்த புடைப்புச் சிற்பங்கள் சேதமடைந்தன.

ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாம் தலத்தில் உள்ள கொடுங்கைகள் ஏற்கெனவே உடைந்து கீழே விழுந்ததையடுத்து கோபுரத்தின் நுழைவு வாயில் மூடப்பட்டது. இந்த கோபுர வாசலை திறக்கக் கோரி பல்வேறு அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மேற்கு கோபுரத்துக்குள் வெள்ளிக்கிழமை மாநகராட்சியின் டிப்பா் லாரி ஒன்று உள்ளே செல்ல முயன்றது. ஆனால், லாரியின் அகலம் காரணமாக உள்ளே செல்ல முடியாமல் பாதியில் நின்றது. இதையடுத்து லாரியை பின்னோக்கி இயக்கியபோது, லாரியின் பக்கவாட்டுப் பகுதி உரசியதால் கோபுரத்தின் உள்பகுதியில் சுவரில் உள்ள புடைப்புச் சிற்பங்கள் சிறியளவில் சேதமடைந்தன.

இதைகண்டு அதிா்ச்சி அடைந்த பக்தா்கள் இதுபோன்ற கனரக வாகனங்கள் கோயில் கோபுரத்துக்குள் நுழைய தடைவிதிக்க வேண்டும் என்றனா். லாரி உரசியதால் சேதமடைந்த சுவரில் மூலவா் ரெங்கநாதரின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளிட்ட எண்ணற்ற சிற்பங்கள் உள்ளது குறிப்பிடதக்கது.

Tags

Next Story