டெண்டர் விடப்பட்டும் தொடங்காத சேதமடைந்த பாலப்பணி

டெண்டர் விடப்பட்டும் தொடங்காத சேதமடைந்த பாலப்பணி

மருங்கப்பள்ளம் சிவன்கோயில் அருகே ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


மருங்கப்பள்ளம் சிவன்கோயில் அருகே ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மருங்கப்பள்ளம் சிவன்கோயில் சாலையில் வலுவிழந்து, சேதமடைந்த நிலையில் உள்ள பாலத்திற்கு, டெண்டர் விடப்பட்டும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். உடனடியாக பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மருங்கப்பள்ளத்தில் புகழ்பெற்ற ஒளஷதபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த சிவன் ஆலயத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். பேராவூரணியிலிருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் கிழக்கு கடற்கரை இணைப்பு சாலையில் மருங்கப்பள்ளம் சிவன்கோயில் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கல்லணைக் கால்வாய் நாடியம் கோட்டக்குளம் செல்லும் நாடாகாடு கிளை வாய்க்காலின் குறுக்கே சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சேதமடைந்த, வலுவிழந்த பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் வழியாக தினசரி சிவன்கோயிலுக்கு கார், பைக்குகளில் செல்லும் பக்தர்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் பாலத்தின் வழியாக செல்கின்றனர். மேலும் குருவிக்கரம்பை பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டால் மாற்றுப்பாதையாகவும் உள்ளது. இத்தனை முக்கிய போக்குவரத்து உள்ள சாலையில் உள்ள இந்தப் பாலம் சேதமடைந்தும், பக்கவாட்டு தடுப்புச்சுவர் இல்லாததாலும் பாலம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்திலேயே பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பொதுமக்களின் தொடர் கோரிக்கையினால் பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட டெண்டர் விடப்பட்டும், குறிப்பிட்ட காலக்கெடு கடந்தும் ஒப்பந்தக்காரர் பணியைத் தொடங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தப் பாலத்தை வாகனங்கள் கடக்கும்போது அசம்பாவிதம் ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்படும் முன்பாகவும், மேட்டூரில் தண்ணீர் திறந்து கல்லணைக் கால்வாயில் தண்ணீர் வருவதற்கு முன்பாக பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story