கலை நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய நடன கலைஞர் உயிரிழப்பு
உயிரிழப்பு
இரணியல் அருகே கலை நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய நடன கலைஞர் உயிரிழப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள பேயன் குழியை சேர்ந்தவர் மோகன்ராஜ் மகன் நிகேஷ் (33). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பிளம்பர் வேலை செய்யும் இவர் அவ்வப்போது நடன நிகழ்ச்சிகளுக்கும் செல்வதுண்டு. இந்த நிலையில் நிகேசுக்கு அடிக்கடி தலைவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது டாக்டர்கள் இரவு நேரங்களில் அதிகமாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி நிகேஷ் சக நடன கலைஞர்களுடன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் ஒரு கோவில் விழாவில் நடன நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். மறுநாள் அதிகாலை நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் ஊருக்கு புறப்பட்டு வந்துள்ளனர். ஊருக்கு வந்த பின் நிகேஷை எழுப்பிய போது அவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே சக கலைஞர்கள் அவரை சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோத்த டாக்டர்கள் நிகேஷ் தலையில் அதிக அளவில் ரத்த கட்டு உறைந்து இருப்பதாகவும், வேறு மருத்துவமனை கொண்டு செல்லுமாறு கூறியிருக்கின்றனர். உடனடியாக சக கலைஞர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, தொடர்ந்து அவரை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நிகேஷ் நேற்று உயிரிழந்தார். இது குறித்து அவரது தாயார் அம்பிகா என்பவர் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story