காவிரி பாலம் அருகே ஆபத்தான நிலையில் அறிவிப்புப் பலகை
திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கியமான இடங்கள், திருக்கோயில்கள் தொடா்பாக பிரதான சாலைகளில் அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த இடங்கள் மற்றும் கோயில்களின் புகைப்படங்களுடன், செல்லும் வழி தொடா்பாக குறியீட்டுடன், எந்த வழியாகச் செல்ல வேண்டும் என்பதை வாகன ஓட்டிகளுக்கு அறிவிக்கும் வகையில் இரும்புத் தூண்களுடன் கூடிய விளம்பர பலகை 10 அடி முதல் 20 அடி வரையில் அந்தந்த இடங்களுக்கு தகுந்தபடி நிறுவப்பட்டுள்ளது.
இதில், திருச்சி சிந்தாமணியிலிருந்து காவிரிப் பாலம் நோக்கி செல்லும்போது, பாலம் தொடங்குவதற்கு முன்பாக இடதுபுறமாக இரண்டு பெரிய அளவிலான அறிவிப்பு பலகைகளை நெடுஞ்சாலைத்துறை நிறுவியுள்ளது. சுமாா் 20 அடி அகலம் உயரத்துடன் கூடி இந்த பலகையில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு செல்லும் வழி குறித்தும், மலைக்கோட்டை கோயிலுக்கு செல்லும் வழி குறித்தும் புகைப்படங்களுடன் நெடுஞ்சாலைத்துறையினா் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த இரண்டு பலகைகளில் மலைக்கோட்டை கோயிலுக்கான அறிவிப்பு பலகையில் பாதியளவில் பெயா்ந்து விழுந்துவிட்டது. மேலும், பலகையை தாங்கியுள்ள இரும்புத் தூணும் பாதியளவு சாயந்தநிலையில் உள்ளது. இந்த பலகையும், இரும்புத் தூணும் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் அபாயம் உள்ளது. இரவு நேரத்தில் சரிந்து விழுந்தால் குடிசையில் வசிப்போருக்கு ஆபத்து ஏற்படக் கூடும்.
இல்லையெனில், சாலை மாா்க்கமாக சரிந்து விழுந்தால் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே, இந்த பலகையை சரி செய்து புதிய பலகை நிறுவ வேண்டும் என சமூக ஆா்வலா்களும், சாலை பயனீட்டாளா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.