சாலையின் குறுக்கே மின்கம்பம் குன்றத்துாரில் விபத்து அபாயம்
மின்கம்பம்
முருகன் கோவில் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக மின் கம்பம்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துாரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில் குன்றத்துார் பேருந்து நிலையத்தில் இருந்து முருகன் கோவில் செல்லும் சாலையில், வாகன போக்குவரத்துக்கு இடையூறாக மின் கம்பம் உள்ளது. பகலில் நிதானமாக வந்தாலும், இரவில் மின்கம்பம் இருப்பதை அறியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் அதன் மீது மோதி, விபத்தில் சிக்கி வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: முருகன் கோவில் செல்லும் சாலையில், குன்றத்துார் அரசு போக்குவரத்து பணிமனைக்கு, ஏராளமான அரசு பேருந்துகள் செல்கின்றன. காலை - மாலை மற்றும் சுபமுகூர்த்தம் நாட்களில், இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்நிலையில், சாலையின் குறுக்கே போக்குவரத்துக்கு இடையூறாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கும் மின்கம்பத்தை அகற்றி, வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story