நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் ஆபத்தான புதர்கள் .
குமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடர் மழையின் காரணமாக புல், செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் காணப்படுகிறது.இரண்டு நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் நிறுத்தி இருந்த துணை மேயர் வாகனத்தில் பாம்பு புகுந்ததாகவும், தீயணைப்பு துறை அலுவலர்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே பாம்பை பிடித்ததாகவும் செய்தி வெளியானது. இந்த நிலையில் அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சிக்கு வரும் மாணவ மாணவிகள் வீரர்கள் யாரும் பாதிக்காத வண்ணம் உடனடியாக புதர்களை அகற்றி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக, விளையாட்டு அரங்க பணியாளர்கள் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து விளையாட்டு அரங்கத்தை கண்காணிப்பதோ, பந்து போன்ற விளையாட்டு உபகரணங்கள் எடுத்து கொடுப்பதோ இல்லை என புகார் எழுந்துள்ளது. அவர்களுக்கு அதிக பணிச்சுமை மற்றும் சிரமமான காரியமாக இருப்பதால் மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அண்னா விளையாட்டரங்க நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.