நாகர்கோவில் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பள்ளங்கள்
சாலையில் உள்ள பள்ளம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் - கோட்டார் தேசிய சாலையில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தால், வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மழை பெய்யும் சமயத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த பள்ளத்தில் பைக்குகள் மட்டுமின்றி கனரக வாகனங்களுமே தடுமாறி தான் செல்கின்றன. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் கன்னியாகுமரி, சுசீந்திரத்துக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
இவ்வாறு சுற்றுலா வருபவர்கள், கன்னியாகுமரியில் இருந்து பத்மநாபபுரம், திருவனந்தபுரம் செல்ல இந்த சாலையை தான் பயன்படுத்துகிறார்கள். மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை இவ்வாறு மோசமாக கிடப்பது, உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூரில் இருந்து வருபவர்களையும் கவலை அடைய செய்துள்ளது. இந்த ராட்சத பள்ளத்தால், கோட்டார் சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கும் நிலை உள்ளது. தற்போது முகூர்த்த நாள் என்பதுடன், விடுமுறை தினமும் என்பதால், கோட்டார் சாலையில் அதிகளவில் வாகன போக்குவரத்து இருந்தது. சாலையில் உள்ள பள்ளத்தால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன.