பட்டாசு வெடி விபத்தில் உயிரிழப்பு: எம்பி மாணிக்கம் தாகூர் வேண்டுகோள்

பட்டாசு வெடி விபத்தில் உயிரிழப்பு: எம்பி மாணிக்கம் தாகூர் வேண்டுகோள்

செய்தியாளர்களை சந்தித்த எம்பி

விருதுநகர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் ரூ.10 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்று எம்பி மாணிக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மதுரை தனக்கன்குளம் பகுதியில் புதிதாக திருமண மண்டபம் கட்டுவதற்காக இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில்: காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாற்றம் குறித்த கேள்விக்கு: காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அமைப்பு ரீதியாக சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார் இது வரவேற்கத்தக்கவை. கே.எஸ் அழகிரி ராசியானவர், பல வெற்றிகளை பெற்று தந்துள்ளவர். அவர் பணி என்றும் காங்கிரஸ் வரலாற்றில் போற்றப்படும். செல்வப் பெருந்தகைக்கு இந்த பொறுப்பு மிகவும் முக்கியமானது அதை சிறப்பாக செய்து முடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ்குமார் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

அதனால் இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை என மோடி கூறியது குறித்த கேள்விக்கு: மோடியை பொறுத்தவரை தான் என்ன செய்தேன் என்று மக்களிடம் சொல்ல வக்கில்லாமல், விவசாயிகளை, இளைஞர்களை, பெண்களை, சிறுகுறு தொழிலாளர்களை ஏமாற்றி வாக்கை பெற்று தற்போது அவர்களுக்கு என்ன செய்தார் என்று சொல்ல பிரதமரிடம் ஒன்றும் இல்லை.

வட இந்திய ஊடகங்களில் ஆதரவுடன் அவர்கள் வெற்றி பெறப்போவதாக பிம்பத்தை உருவாக்குகிறார்கள். காங்கிரஸ் 40 தொகுதியை வெல்லட்டும் என்று மோடி கூறியது குறித்து கேள்விக்கு: நாங்கள் ஏற்கனவே 50 தொகுதிகளுக்கும் மேல் வென்று விட்டோம் தற்போதைய இவர் சவடால் விடுகிறார்.

பிரச்சனைகளை மறைப்பதற்காக வீண் விவாதங்களை தொடங்குகிறார். பாஜக வளர்ச்சி பெற்று உள்ளது என்று கார்த்திக் சிதம்பரம் கூறியது குறித்த கேள்விக்கு: அவர்கள் வட மாநில பத்திரிகைகளை நம்பி இந்த பேச்சை பேசுகிறார்கள். மக்களை சந்திக்காதவர்கள் பேசுகின்ற பேச்சு இது. மக்களைப் பற்றி சிந்திப்பவர்களுக்கும், மக்களிடம் உரையாடுபவர்களுக்கும் உண்மையான பிரச்சனை தெரியும்.

பிரச்சனைகளை மறைத்து மதத்தினால் வாக்களிக்க வேண்டும் என்று பாஜக அவர்களை திருப்பிக் கொண்டிருக்கிறது. ஜாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும் மக்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் ராகுல் காந்தி யாத்திரை நடந்து கொண்டிருக்கிறார். விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து குறித்த கேள்விக்கு: இந்தப் பிரச்சனை மூன்று முக்கிய விஷயங்களை சிக்கி தவிக்கிறது.

தொழில் ரீதியான பாதுகாப்பு, தொழில் ரீதியான அதிகாரிகள் கண்காணிப்பு, அதோடு சேர்த்து மத்திய அரசின் தலையீடு மிகவும் அவசியம். இவற்றில் தொய்வு ஏற்படும் போது இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் 10 லட்ச ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தொகுதி பங்கீடு குறித்த கேள்விக்கு: அந்தக் குழுவில் நான் இல்லை டி ஆர் பாலு தலைமையிலான குழுவிடம் பேசி உள்ளார்கள். சுமுகமான பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது மீண்டும் திமுகவினர் அழைத்தால் அவர்களுடன் பேசி நல்ல முடிவை எடுப்பார்கள்.

விருதுநகர் தொகுதி திமுக கேட்டால் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு: இந்தியா கூட்டணி சேர்ந்து பயணிக்கிறோம் எந்த முடிவு எடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் முக்கியமே தவிர தனிநபரின் விறுப்பு வெறுப்புகள் முக்கியமில்லை.

அயோத்தியில் குழந்தை ராமருக்கு ஒரு மணி நேரம் ஓய்வு கொடுத்திருப்பது குறித்த கேள்விக்கு: மக்கள் பிரச்சினைகளை திசைதிருப்பி மக்களை குழப்பி மதப் பிரச்சினைகளை உருவாக்க சதி திட்டம் திருட்டுகிறார்கள் அதில் விழுந்து விடாமல் மக்கள் பிரச்சினைகளை சிந்திக்கும் கட்சிக்கும் மக்கள் முன்னுரிமை கொடுப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது என்றார்.

Tags

Next Story