சாலை வசதி ஏற்படுத்தாவிட்டால் தேர்தலை புறக்கணிக்க முடிவு
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அரசு தேயிலைத் தோட்ட கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் சேரம்பாடி சரகம் நான்கு என்கின்ற இடத்தில் தேயிலைத் தோட்டத்தில் பணி பரிந்து வருகின்றனர். இந்த தேயிலை தோட்டமானது மறைந்த தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களால் 1969ல் தாயகம் திரும்பியோர்க்காக உருவாக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 50ஆண்டுகளுக்கு முன் சாலை வசதியின்றி தற்காலிகமாக அமைக்கப்பட்ட கற்களாள் குண்டும் குழியுமாக இருந்த சாலையையே அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர் .
சேரம்பாடி சரகம் நான்கு வழியாக நாயக்கன் சோலை பகுதியில் செல்லக் கூடிய இந்த கற்கள் பதிக்கப்பட்ட சாலை தற்போது பெயர்ந்து மண் சாலையாக மாறியுள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மருத்துவம் உள்ளிட்ட அத்யாவசிய தேவைக்கு இந்த சாலையை தான் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர், கிராம சபை கூட்டம், ஊராட்சி அலுவலகம், அரசு துறை அதிகாரிகளுக்கும் இந்த சாலையை சீரமைத்து தரக்கோரி பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இறுதியாக கிராம புற வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அப்பகுதி மக்கள் சாலையை சீரமைத்து தரக்கோரி மனு அளித்தனர்.
அப்பகுதிக்கு நேரடியாக சென்ற கிராமப்புற வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம பகுதி மக்களை சந்தித்து தற்போது தேர்தல் வருவதால் தேர்தல் முடிந்த பிறகு சாலையை சீரமைத்து தருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சாலையை சீரமைத்தால் மட்டுமே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதாகவும் இல்லை என்றால் வருகின்ற தேர்தலை புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.