சேலத்தில் மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு
சேலம் விஜயராகவன் நகர் பகுதியில் தபால் நிலையம் மூடப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
சேலம் விஜயராகவன் நகர் பகுதியில் தபால் நிலையம் மூடப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
சேலம் மேற்கு அம்மாபாளையம் வட்டத்தில் அமைந்துள்ள விஜயராகவன் நகர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த துணை தபால் நிலையத்தை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மூடப்பட்டதை கண்டித்து விஜயராகவன் நகர் குடியிருப்பு நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் போராட்டம் முற்றுகை உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால் நிர்வாகத்தின் சார்பில் மீண்டும் அதே இடத்தில் தபால் நிலையம் அமைக்க எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அஞ்சல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் விஜயராகவன் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து இன்று காலை மூடப்பட்ட தபால் நிலையம் முன்பு திரண்ட குடியிருப்பு வாசிகள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு உடனடியாக தலையிட்டு மீண்டும் இதே இடத்தில் துணை தபால் நிலையம் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூத்த குடிமக்கள் முதியோர் மற்றும் குடியிருப்பு நலச் சங்கத்தினர் பயன்படுத்தி வந்த தபால் நிலையம் இதே இடத்தில் இயங்க தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும். இல்லையெனில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். குடியிருப்போர் நல சங்க நிர்வாகி நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் குடியிருப்பு வாசிகள் திரளாக பங்கேற்றனர்.
Next Story