ஊட்டியை மாநகராட்சியாக மாற்ற தீர்மானம்!

ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் 36 வார்டுகள் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து 2240 மீட்டர் உயரத்தில், 1987 முதல் சிறப்பு நிலை நகராட்சியாக இயங்கி வரும் ஊட்டியின் மொத்த பரப்பளவு 30 சதுர கி.மீ., கடந்த 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 88,430 பேர் இங்கு வசித்தனர். தற்போது ஊட்டி நகராட்சியில் 1.25 கோடி பேர் வசிக்கின்றனர்.

இதே போல் 3500 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் உள்ளன. சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு ஆண்டுதோறும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக இருப்பதால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இ- பாஸ் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில், 1866-ம் ஆண்டு ஊட்டி நகராட்சியாக உருவானது என்பதால், நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்து, நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தினால் அதிக அளவில் அரசு திட்டங்கள், நிதி செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் உயரும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், நகர்மன்றத்தின் ஒப்புதல் பெற நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமையில் அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் கூறியதாவது:- ஊட்டி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் அருகில் உள்ள ஒரு சில கிராம ஊராட்சிகள் ஊட்டியுடன் இணைக்கப்படும். அவ்வாறு இணைக்கப்படும் ஊராட்சிகளில், ஊட்டிக்கு கொண்டு வரப்படும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். குறிப்பாக சாலை வசதி, வாகன நிறுத்தும் வசதி பெரிய அளவில் நிறுவப்படும். இதன் மூலம் உள்ளூரில் உள்ள முக்கிய தொழிலான விவசாயம் சுற்றுலா சிறப்பாக நடைபெறும். மேலும் உள்ளூர் மக்களின் வருமானம் உயர்ந்து வாழ்க்கை தரம் மேம்படும். தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story