புதுகையில் சீம கருவேல மரங்களை அகற்ற முடிவு
மாவட்ட ஆட்சியர்
புதுக்கோட்டை நகருக்கு அருகே, காரைக்குடி நெடுஞ்சாலையிலுள்ள கவிநாடு கண்மாயில் உள்ள 548 சீமைக் கருவேல மரங்களை அகற்ற வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தலைமை வகித்தார். மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். ரம்யாதேவி உள்ளிட்ட அதிகாரிகளும், காவிரி -குண்டாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மிசா மாரிமுத் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
மாவட்டத்திலுள்ள சீமைக்கருவேல மாவட்டத்திலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் தொடர் பணியின் ஒரு கட்டமாக, கவிநாடு கண்மாயில் பணிகளைத் தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
நகருக்கு அருகே காரைக்குடி நெடுஞ்சாலையிலுள்ள மாவட்டத்தின் பெரிய கண்மாயாகக் கருதப்படும் கவிநாடு கண்மாய் 1200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில், இந்தக் கண்மாயில் 548 சீமைக்கருவேல மரங்கள் இருப்பதாக வனத்துறையால் கணக்கெடுக்கப்பட்டு, அகற்றுவதற்கான முன்மொழிவுகள் தரப்பட்டுள்ளன.
இந்தக் கண்மாயில் முதல் கட்டமாக சீமைக்கருவேல மரங்களை அகற்றி, அதே இடத்தில் பலன்தரும் நல்ல மரங்களை நட்டு வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.