கனமழையால் மல்லிகை விற்பனை ல் சரிவு; வியாபாரிகள் வேதனை
தென்மாவட்டங்களில் மழை காரணமாக மதுரை மல்லிகை விற்பனை சரிந்துள்ளதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தென்மாவட்டங்களில் மழை காரணமாக மதுரை மல்லிகை விற்பனையில் சரிவு - வியாபாரிகள் வேதனை மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மதுரை மல்லிகையின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை. இதனால் மதுரை மலர்ச் சந்தையில் மலர்கள் அனைத்தும் தேக்கம். மதுரை மாவட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமன்றி, அண்டை மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
நாளொன்றுக்கு சராசரியாக 50 டன்னுக்கும் மேல் பல்வேறு வகையான பூக்கள் இங்கு விற்பனையாகின்றன. நல்ல மணம் மற்றும் மலரின் தன்மை காரணமாக மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகள் உண்டு. மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து பெற்றுள்ள காரணத்தால், துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு மதுரை மல்லிகை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மதுரையிலிருந்து கொண்டு செல்லப்பட வேண்டிய மலர்கள் அனைத்தும் மதுரை மலர் சந்தையிலேயே தேக்கம் கண்டுள்ளது. இதனால் மல்லிகை உள்ளிட்ட பல்வேறு பூக்களின் விற்பனையில் பெரிதும் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இன்றைய விலை நிலவரத்தைப் பொறுத்தவரை மதுரை மல்லிகை கிலோ ரூ.1,500, பிச்சி ரூ.600, முல்லை ரூ.800, சம்பங்கி ரூ.120, பட்டன் ரோஸ் ரூ.180, பன்னீர் ரோஸ் ரூ.180, செண்டு மல்லி ரூ.100, செவ்வந்தி ரூ.120, அரளி ரூ.200, கனகாம்பரம் ரூ.600, மெட்ராஸ் மல்லி ரூ.500 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.