முக்கடல் அணை நீர்மட்டம் சரிவு - குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் 

முக்கடல் அணை நீர்மட்டம்  சரிவு - குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் 
முக்கடல் அணை 
நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் புத்தன்அணை குடிநீர் திட்டத்தில் நாகர்கோவிலுக்கு உடனடியாக தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதியில் மூன்றரை லட்சம் மக்களுக்கு மேல் வசிக்கும் நிலையில் இங்கு குடிநீர் தேவையை முக்கடல் அணையே நிவர்த்தி செய்து வருகிறது. முக்கடல் அணையின் மொத்த கொள்ளளவு 25 அடியாகும். மழை இல்லாத நேரத்தில் விநாடிக்கு 8 கனஅடிக்கு மேல் நீர் விநியோகம் செய்தால் கூட இரு மாதத்திற்குள் தண்ணீர் வற்றிவிடுவது வாடிக்கையாக உள்ளது. பெரியஅணையாக இல்லாமல் ஒரு நீர்தேக்கம் போன்றே முக்கடல் அணை உள்ளது. இதுனால் ஆண்டுதோறும் கோடைகாலமான ஏப்ரல், மே மாதத்தில் நாகர்கோவில் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதும், மக்கள் அவதியடைவதும் தொடர் கதையாகி வந்தது. இதை நிவர்த்தி செய்யும் வகையில் புத்தன்அணை குடிநீர் திட்டம் ஏற்படுத்தப்பட்டு அதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. புத்தன்அணை திட்டத்தில் நாகர்கோவில் மாநகருக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான வெள்ளோட்டமும் முடிந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் முடிவதில் காலதாமதமாவதால் இந்த கோடையிலும் புத்தன்அணை தண்ணீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது முக்கடல் அணை நீர்மட்டம் 16 அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 8.6 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்னும் 15 நாட்களுக்குள் முக்கடலில் நீர்மட்டம் 10 அடிக்கு குறைவாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் இருப்பதால் நாகர்கோவில் பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் புத்தன்அணை குடிநீர் திட்டத்தில் நாகர்கோவிலுக்கு உடனடியாக தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story