தீபத்திருவிழா: துறை வாரியாக ஆய்வுக் கூட்டம்
அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலவலக கூட்டரங்கில் அருள்மிகு அருணாசலேசவரர் திருக்கோயில் நடைபெற உள்ள திருக்கார்த்திகை தீபத்திருவிழா - 2023 முன்னிட்டு அனைத்து துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர்கள் தெரிவித்ததாவது: திருக்கார்த்திகை தீபத்திருவிழா-2023 வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. வெளி நாடுகள். வெளி மாநிலங்கள். வெளி மாவட்டங்கள் என்று 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பஞ்சமூர்த்திகள், விநாயகர், முருகன், சுவாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து திருத்தேர்களின் திருத்தேரோட்டம் திருக்கோயிலை சுற்றி உள்ள மாடவீதிகளில் நடைபெறும். அதேபோல் தேர் மராமத்து பணிகள் குறித்து ஆய்வு செய்து மராமத்து பணிகள் அனைத்தும் விரைந்து முடித்திட வேண்டும்.
26.11.2023 அன்று அதிகாலை 4.00 மணிக்கு பரணி தீபதரிசனம், மாலை 6.00 மணிக்கு மகா தீபதரிசனத்தை அனைவரும் காணும் வகையில் அதிநவீன திரை மூலம் திருக்கோயில் உட்புறம், திருக்கோயில் 4 கோபுரங்கள் முன்புறம், தற்காலிக பேருந்து நிலையங்கள் உட்பட 20 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு தரிசன வரிசை கூடுதலாக அமைத்தல் வேண்டும். அதேபோல் பக்தர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், திருக்கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து கழிவறை மற்றும் குளியலறை தூய்மையான முறையில் வைத்திருத்தல் வேண்டும். திருக்கோயில் உட்பிராகரம் மற்றும் வெளிபிராகரம் 28 நிரந்தர கழிவறைகள் . 27 நிரந்தர குளியல் அறைகள் உள்ளது. திருக்கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் 30 நடமாடும் கழிவறைகள் நிறுவப்படவுள்ளது. நகர்பகுதி, தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் கிரிவலப்பாதை ஆகிய இடங்களில் உள்ளாட்சி துறை மூலம் நடமாடும் கழிவறைகள் 200. நடமாடும் குளியலறை 25, நகராட்சி மூலம் நடமாடும் கழிவறைகள் 200. என மொத்தம் 400 கூடுதல் நடமாடும் கழிவறைகள் 25 நடமாடும் குளியலறைகள் அமைக்க திருக்கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மலைமீது தீபம் ஏற்றுவதற்கான செப்பு கொப்பறை 25.11.2023 அன்று மலை மீது எடுத்துச் சென்று மலை உச்சியின் மீது நிறுவ தயார் நிலையில் உள்ளது. திருக்கோயிலுக்கு உள்ளேயும் திருக்கோயிலுக்கு வெளியேயும் தேவைப்படும் இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. தேரினை இழுப்பதற்கு தேவையான 200 மீட்டர் நீளம் கொண்ட இரும்பு சங்கிலிகள் மராமத்து பணி மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 2023-ம் ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழானை முன்னிட்டு திருக்கோயில் கோபுரங்கள் அதிநவீன சுத்தம் செய்யும் வாகனம்கொண்டு சுத்தம் செய்யும் பணி தீயணைப்புத்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது.
2023 திருக்கார்த்திகை தீபத்திருவிழா செலவினங்களுக்காக நகராட்சித் துறைக்கு முன்பணம் ரூ.50 இலட்சம் மற்றும் உள்ளாட்சித் துறைக்கு முன்பணம் ரூ.50இலட்சம் தொகை 08.11.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது. 500 நபர்களுக்கு மட்டும் 24.11.2023 அன்று காலை 10.00 மணி முதல் பரணி தீபம் இணைய வழி கட்டணச் சீட்டுக்களை https://annamalayar.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் முன்பதிவு செய்து கட்டண சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு இராஜகோபுரம் திட்டிவாயில் வழியாக பிற்பகல் 2.00 மணியளவில் உள்ளே வர அனுமதிக்கப்படுவார்கள். மடப்பள்ளி அருகே திருமாளப்பத்தி மேலே ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வைக்கப்படுவார்கள். பிற்பகல் 2.00 மணி முதல் கிழக்கு இராஜகோபுரம் திட்டிவாயில் வழியாக அனுமதிக்கப்பட்டு, கருணை இல்லம் எதிர்புறம் 4-ம் பிராகரத்தில் அமைக்கப்படவுள்ள தற்காலிக படிவவரிசைகள் வழியாக மாலை 4.00 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். 24.11.2023 அன்று காலை 10.00 மணி முதல் மகா தீபம் இணைய வழி https://annamalayar.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் முன்பதிவு செய்து கட்டண சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மூலம் தடையற்ற மின்சாரம் வழங்கும் பொருட்டு ஜெனரேட்டர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருக்கோயில் வளாகம் மற்றும் அதன் சுற்றிவுள்ள பகுதிகளில் நான்கு கோபுர நுழைவு வாயில்கள், சன்னதி நுழைவு வாயில்கள், வடக்கு மற்றும் தெற்கு ஒத்தவாடை தெருக்கள். பேகோபுரத் தெரு, இராஜகோபுரம் முன்புறம், சுவாமி உலாவரும் மாடவீதிகளில் 11 இடங்கள், உற்சவ பஞ்சமூர்த்திகள் அலங்காரம் செய்யப்படும் திருக்கல்யாண மண்டபம், கிரிவலப்பாதை சுற்றி (தற்காலிக கேமரா) என 623 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது.
தகவல் தொடர்பு வசதிகள் திருக்கோயில் 4 பிரதான கோபுர வாயில்கள் மற்றும் திருக்கோயில் உட்புறங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையில் 8 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்திருவிழாவினை முன்னிட்டு 17.11.2023 முதல் 24.11.2023 வரை நட்சத்திர கலைஞர்களின் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. திருக்கோயில் கலையரங்கம் மற்றும் அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வர் சன்னதி புதிய மேடையில் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபத் திருவிழாவிற்கு பாதுகாப்பு பணிக்காக வருகைத்தரும் காவல் துறையினர், சிறப்பு பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் தினமும் 17.11.2023 முதல் 27.11.2023 வரை நாள் ஒன்றுக்கு, இரண்டாயிரம் நபர்களுக்கு உணவு கலையரங்கம் அருகில் உள்ள கருணை இல்லம் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தழிழ்நாடு காவல் துறையின் மூலம் 13 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 4 அடுக்கு பாதுகாப்பு பணிகள் காவல் துறை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் கோயில் பகுதி, கிரிவலப்பாதை பாதுகாப்பு பணி, போக்குவரத்து சீர் செய்தல் பணி. குற்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் தடுத்தல் உள்ளிட்ட பணிகளில் காவலர்கள் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். சிறப்பு பணி அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், பிற துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
2023-திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு உபயதாரர்கள்/கட்டளைதாரர்களுக்கு சிப் பொருத்தப்பட்ட அனுமதி சீட்டு வழங்கப்படவுள்ளது. ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். திருக்கோயில் வளாகத்தில் மொத்தம் 46 தீயணைப்பு உருளைகள், 17 மணல் வாளிகள். 23 நீர் வாளிகள் அனைத்தும் பழுது பார்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. திருக்கோயில் வளாகத்தில் உள்ள பெரிய நந்தி அருகில் உள்ள வளைகாப்பு மண்டபம், மடப்பள்ளி அருகில் தச்சொளி மண்டபம், திருமஞ்சனகோபுரம், வடக்கு கோபுரம் அருகில் திருக்கோயில் மருத்துவமையம் அருகே உள்ள ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆகிய இடங்களில் அரசு மருத்துவர்கள் குழு மற்றும் திருக்கோயிலில் இயங்கும் முதலுதவி மருத்துவமையம் செயல்படும். அவசரத் தேவைக்கு 2 முதலுதவி வாகனமும், இரு சக்கர வாகனம், 108 ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர்கள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்), ஓ.ஜோதி (செய்யார்). இந்து அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளிதரன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், மண்டல இணை ஆணையர் சுதர்சன்,
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சி.ஜோதி, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மா.பழனி. மாவட்ட வன அலுவலர் அருண்லால், உறுப்பினர், தமிழ்நாடு அரசு உடல், உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பாளர் வாரியம் இரா.ஸ்ரீதரன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றியக்குழுத் தலைவர் கலைவானி கலைமணி, நகர்மன்ற தலைவர்நிர்மலா கார்த்திக் வேல்மாறன், ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் ரமணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.