பேராவூரணி அருகே பிடிபட்ட புள்ளிமான் - வனத்துறையினர் வசம் ஒப்படைப்பு


புள்ளிமான்
பேராவூரணி அருகே பிடிபட்ட புள்ளிமான் வனத்துறை இடம் ஒப்படைக்கப்பட்டது.
பேராவூரணி அருகே பிடிபட்ட புள்ளிமான் வனத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட பழைய பேராவூரணி மேலத்தெரு பகுதியில், வியாழக்கிழமை (மார்ச்.28) காலை, அப்பகுதி இளைஞர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து புள்ளிமான் ஒன்று அதிவேகமாக பாய்ந்து ஓடி வந்துள்ளது. இதையடுத்து இளைஞர்கள் நாய்களை துரத்தி விட்டு, மானை விரட்டிச் சென்று பிடித்து பத்திரமாக அங்கிருந்த ஒரு வீட்டில் கட்டி வைத்தனர். மேலும் தண்ணீர், புல் ஆகியவற்றை மானுக்கு வழங்கினர். மேலும், இதுகுறித்து வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் சர்மா, காவல்துறை தலைமைக் காவலர் அருள்செல்வன், வருவாய் கிராம உதவியாளர்கள் வந்து பார்வையிட்டனர். பின்னர், பட்டுக்கோட்டை வனச்சரகர் சந்திரசேகரன் உத்தரவின்படி, வனத்துறையினர் மானை பத்திரமாக மீட்டுச் சென்றனர். இந்த மானுக்கு லேசான காயங்கள் இருப்பதால், கால்நடை மருத்துவர்கள் சிகிச்சைக்கு பிறகு, காப்புக்காட்டில் பத்திரமாக விடுவிக்கப்படும்" என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பெண் மான் பிடிபட்ட புள்ளிமான் சுமார் 20 கிலோ எடையுள்ள, 3 வயதுடைய பெண் மானாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் வனப்பகுதி இல்லாத நிலையில் புள்ளிமான் எப்படி வந்தது எனத் தெரியவில்லை. இங்கிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள, ஆலங்குடி - கொத்தமங்கலம் வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு சுமார் 15 கி.மீ தூரத்தில் உள்ள கீரமங்கலம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் ஒன்று சாலையில் இறந்து கிடந்தது. அதனை வனத்துறையினர் கைப்பற்றி உடற்கூறாய்வு செய்து அதனை அடக்கம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. வனத்துறை நடவடிக்கை எடுக்குமா...? புதுக்கோட்டை மாவட்ட வனப்பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அந்த பகுதியில் காப்புக்காடுகள் இருந்தன. மேலும் வனவிலங்குகள் உணவுகள் தண்ணீர் தேடி வெளியே வராமல் இருக்க சிறு குட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் தற்போது காப்பக்காடுகள் அழிக்கப்பட்டு தைல மரம் மற்றும் முந்திரிக் காடுகள் மட்டுமே இருப்பதால் உணவு தேடியும், தண்ணீர் தேடியும் மான்கள் சாலை பகுதிக்கு வந்து, நாய்களால் கடிபட்டும், விபத்தில் சிக்கியும் உயிரிழக்கும் நிலை உள்ளது. எனவே, காப்புக்காடு பகுதியில் பல்வேறு வகையான மரங்களை வளர்க்கவும், தண்ணீர் குட்டைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஏ.டி.எஸ்.குமரேசன். வலியுறுத்தியுள்ளார்.
Next Story


