சிதைக்கப்படும் சிற்பங்கள், ஓவியங்கள் - தொல்லியல் ஆர்வலர்கள் கண்டனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், உலக பிரசித்திப் பெற்றதாகும். பல மன்னர்கள் ஆட்சி செய்த காலங்களில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ராஜகோபுரம், பே கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம் உட்பட 9 கோபுரங்கள் உள்ளன. ஆயிரம் கால் மண்டபம் வரலாற்று சிறப்பை பெற்றது. கோயில் உள்ளே பல சந்நிதிகள் உள்ளன. அண்ணாமலையார் கோயிலில் உள்ள ஒவ்வொரு கற்களும் பல்வேறு தகவல்களை கொண்டதாகும். சிற்பங்கள், கல்வெட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன.

மேலும், அழகிய ஓவியங்கள் மற்றும் மூலிகை சாற்றில் வரையப்பட்ட ஓவியங்களும் உள்ளன. பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி திருத்தலம் என போற்றப்படும் இக்கோயில், கலைநயத்துடன் காட்சி தருகிறது. சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்கள், சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். இதில், வெளிநாட்டவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இத்தகைய சிறப்பு மிக்க அண்ணாமலையார் கோயிலில் உள்ள சிற்பங்கள், அழகிய தூண்கள், ஓவியங்கள் மற்றும் தரையில் பதிக்கப்பட்டுள்ள கருங்கற்களை ‘சிதைக்கும்’ செயலில் கோயில் நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கோயில் கற்சுவர்களில் இருந்த சிற்பங்கள் மீது துளையிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பு கம்பிகள் பதிக்கப்பட்டன. இதற்கு பக்தர்களும், தொல்லியல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஒரு சில இடங்களில் மட்டும் கம்பிகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மேற்கூரையில் மூலிகை ஓவியம் மூலமாக நடராஜரின் உருவம் தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது. இந்த மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும், ‘காற்று’ தேவை என்பதற்காக மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின்விசிறியை, நடராஜரின் வாய் பகுதியில் துளையிட்டு பொருத்தியுள்ளனர். இதற்கு பக்தர்களும், தொல்லியல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மின்விசிறி அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல், கோயிலில் தரை பகுதியில் பதிக்கப்பட்டுள்ள கருங்கற்களை துளையிடும் பணி தொடர்கிறது. பக்தர்களை வரிசைப்படுத்தி அனுப்பி வைப்பதற்காக, தடுப்பு கம்பிகள் பதிக்கப்படுகின்றன. நவீன உலகில், பக்தர்களை வரிசைப்படுத்தி அனுப்புவதற்காக, பல வகைகள் வந்துள்ளன. ஆனால், அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் மட்டும், சிற்பங்கள் மற்றும் கருங்கற்களை துளையிட்டு சிதைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. கோயிலில் உள்ள சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் கருங்கற்களை சேதப்படுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த தொல்லியல் துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story