தமிழக அரசு குறித்து அவதூறு: இந்து அமைப்பு நிர்வாகி கைது !
கைது
தமிழக அரசு குறித்து அவதூறு பரப்பும் விதமாக பேசிய தகவல் சமூக வலைதளங்களில் பரவியது தொடர்பாக தஞ்சாவூரில் இந்து அமைப்பு நிர்வாகியைக் காவல் துறையினர் கைது செய்தனர். கோவாவில் ஜனஜக்ருதி சமிதி அமைப்பின் சார்பில் அகில பாரதிய இந்து தேசிய மாநாடு ஜூன் 29 ஆம் தேதி நடைபெற்றது.
இதில், தஞ்சாவூர் கீழவாசல் ரெட்டைவார்க்காரத் தெருவைச் சேர்ந்தவரும், இந்து எழுச்சிப் பேரவை நிறுவனத் தலைவருமான பழ. சந்தோஷ்குமார் (29) பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் கடந்த 5 ஆண்டுகளில் இந்து விரோத தமிழ்நாடு அரசு 200 இந்து கோயில்களை இடித்துள்ளது எனக் கூறினாராம். இவருடைய இந்தப் பேச்சு பேஸ்புக், எக்ஸ் வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு குறித்து அவதூறு பரப்பும் விதமாக சந்தோஷ்குமார் பேசியதாக தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் மோத்திரப்ப சாவடியைச் சேர்ந்த திமுக உறுப்பினர் டி.லெனின் (45) புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.