பள்ளி வாகனங்களில் குறைபாடு கண்டுபிடிப்பு - 152 பள்ளிகளுக்கு நோட்டீசு
பள்ளி வாகனங்கள் ஆய்வு
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 6-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஏற்கனவே சேலம் சரகத்துக்கு உட்பட்ட சேலம், தர்மபுரி மாவட்டங்களில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது பஸ்சில் முதலுதவி பெட்டி, அவசர வழி, தீயணைப்பு கருவி உள்ளதா? என்றும், படிக்கட்டுகள், ஜன்னல்கள், இருக்கைகள் நல்லநிலையில் உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பிரேக் நல்ல நிலையில் இருக்கிறதா? வேக கட்டுப்பாட்டு கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? தகுதிச்சான்று, இன்சூரன்ஸ் சரியாக உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சேலம் சரகத்தில் மொத்தம் 2,349 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 152 பள்ளி வாகனங்களில் குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் இந்த வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வாகனங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அந்த பள்ளிகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர். ஆய்வுக்கு பிறகு தான் அவர்களுக்கு தகுதிச்சான்று வழங்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.