ஆதார் முகாமில் தாமதம்; மாணவர்கள், பெற்றோர்கள் அவதி
தஞ்சாவூர், அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தனியார் நிறுவனத்துடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கு ஆதார் திருத்தம், பதிவு செய்வதற்கான முகாம் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இம்முகாம், மே.22, 23, 24 ஆகிய மூன்று தேதிகளில் காலை 10:30 முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிகளில் இருந்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் நேற்று காலை 9:00 மணி முதல் ஆதார் பதிவு, திருத்தம் செய்வதற்கான டோக்கன்களை வாங்கி வைத்துக்கொண்டு காத்திருந்தனர். இதற்காக 17 கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டு, அதற்கான பணியாட்களும் வந்து இருந்தனர்.
ஆனால், 11:30 மணியாகியும் எந்த ஒரு கம்ப்யூட்டரும் முறையாக வேலை செய்யவில்லை. அதன்பிறகு கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் வரவழைக்கப்பட்டு, சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு ஆதார் சார்ந்த பணிகள் துவங்கப்பட்டன. அதில் எட்டு கம்ப்யூட்டர் மட்டுமே வேலை செய்தது. இதனால், மாணவர்கள் பெற்றோர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து அவதிக்குள்ளாகினர். முறையான ஏற்பாடுகள் செய்யாமல் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஏன் இந்த ஏற்பாட்டை செய்தனர் என பெற்றோர்கள பலரும் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.